மே – 5 வணிகர் தின வரலாறு
1983 இல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் புதிதாக ஒரு வரியை அறிவித்தார். “ என்ட்ரி டேக்ஸ் “ ( நுழைவு வரி ) அதாவது தமிழகத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு விவசாய பொருட்கள் கொண்டு செல்லும்போது அதற்கு “ நுழைவு வரி “ என்கிற வரியை செலுத்தி விட்டு தான் கொண்டு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் விவசாய பொருட்களுக்கு ஏற்கனவே “ செஸ் “ என்கிற வரி இருக்கும்போது இந்த நுழைவு வரியும் வந்தால் பொருட்களின் மீதான விலையேற்றமும், வணிகர்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் தொல்லைகள் அரசு அதிகாரிகளால் உருவாகியது.
எனவே, இந்த நுழைவு வரியை எதிர்த்து மே 5, 1983 ஆம் ஆண்டு தமிழக முழுவதும் உள்ள பல்வேறு வணிக அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கினர். தமிழகம் முழுவதும் தொடர் கடை அடைப்பு நடத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட உணவு தேவைக்காக பொருட்கள் கிடைக்காமல் அல்லல்பட்டனர். போராட்டத்தை ஒடுக்க தமிழகம் முழுவதும் வணிகர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
தொடர் கடையடைப்பால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், உழவர்களும் வணிகர்ளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். போராட்டத்தின் வீச்சை உணர்ந்த எம்.ஜி.ஆர் நுழைவு வரியை உடனடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் கைது செய்யப்பட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் விடுதலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் வணிகர்களை ஒருமுகப்படுத்திய இப்போராட்டமே வணிகர்கள் தினமாக மே – 5 அன்று ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகின்றது.
மே 5 அன்று வணிகர்கள் ஒன்று கூடி தங்களை எதிர்கால வளர்ச்சியையும், தங்களுக்கு சட்டங்கள் வழியாக வரக்கூடிய நெருக்கடிகளை தீர்க்க அரசுக்கு கோரிக்கை முழக்கங்களை வைக்கக்கூடிய நாளாக மே 5, இந்த ஆண்டு வரை 41 வது வணிகர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.